இந்தியை திணிக்க பாஜக கபட நாடகம் ஆடுகிறது - கே.எஸ்.அழகிரி


இந்தியை திணிக்க பாஜக கபட நாடகம் ஆடுகிறது - கே.எஸ்.அழகிரி
x

பாஜக இந்தியைத் திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாகக் கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக மக்களின் நலனிற்கு எதிராகவும், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு குந்தகம் ஏற்படுத்துகின்ற வகையிலும் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. பா.ஜ.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தி எதிர்ப்பு என்று கூறி ஆங்கிலத்தை திணித்தால் வீதிக்கு வந்து போராடுவோம் என்று அண்ணாமலை பேசியிருக்கிறார்.

அரசமைப்புச் சட்டத்தில் 8-வது அட்டவணையிலுள்ள தமிழ் உள்ளிட்ட 18 மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்குகிற வரை ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் கோரிக்கையாகும். இதில் தேவையில்லாமல் பா.ஜ.க., இந்தியைத் திணிக்கிற நோக்கத்துடன் ஆங்கிலத்தை எதிர்ப்பதாகக் கூறுவதைவிட ஒரு கபட நாடகம் எதுவும் இருக்க முடியாது.

அதேபோல, கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து பா.ஜ.க. கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். ஆனால், ஐகோர்ட்டில் கோவை மாநகர் கடையடைப்பு போராட்டத்தை ஆதரிக்கவில்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் கூறியிருக்கிறார். இதில் பா.ஜ.க.வின் அதிகாரப்பூர்வ நிலை என்ன?. இதன்மூலம் பா.ஜ.க.வின் சந்தர்ப்பவாத அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story