தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த பாஜக உழைத்து வருகிறது: அண்ணாமலை

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த தினமும் பா.ஜ.க. உழைத்து வருவதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
அம்பத்தூர்,
பா.ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் மனோகரன் தலைமையில், மாநில மருத்துவ அணி செயலாளர் கோமதி விஸ்வநாதன் ஏற்பாட்டில் மாதவரம் பஜாரில் தாமரை கிளினிக் தொடக்க விழா மற்றும் மாவட்ட பொருளாளர் குமரன் ஏற்பாட்டில் ஏழை-எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி மாத்தூரில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவருக்கு அம்பத்தூர் தொகுதி சார்பில் பாடி மேம்பாலம் அருகே மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. பின்னர் மாநிலத்தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
மதுரையில் கல்லூரி முன்பு ஒரு மாணவியின் தந்தை தாக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது நமது சமுதாயம் எந்த அளவிற்கு கெட்டுப்போய் உள்ளது என்பதை பார்க்க முடியும். சில நேரங்களில் காவல்துறை கடுமையாக தான் இருக்க வேண்டும். காவல்துறையின் கையை கட்டவிழ்த்து விட்டு சில விஷயங்களை தைரியமாக செய்ய சொல்ல வேண்டும்.
வட மாநிலங்களில் நடந்த கலவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தது ஆர்.எஸ்.எஸ். இதை புரியாதவர்கள் ஆர்.எஸ்.எஸ். மீது அபாண்டமாக பொய் சொல்கிறார்கள். கோவை குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு தீவிரவாத தாக்குதல் என்று கூறுவதற்கு முக்கிய காரணம் பா.ஜ.க. தான். சிலிண்டர் வெடி விபத்து என்று கூறி அந்த தாக்குதலை மறைக்க நினைத்த தி.மு.க.வினை தீவிரவாத தாக்குதல் என்று ஒப்புக்கொள்ள வைப்பதற்கு பா.ஜ.க.விற்கு 10 நாட்கள் தேவைப்பட்டது.
தமிழகத்தில் அரசியல் மாற வேண்டும். ஒரு ஆண்டில் 10 சதவீதம் ஊழல் செய்தால் 5 ஆண்டுகளில் நடக்கும் மொத்த ஊழலால் ஒரு தலைமுறை மேலே உயர்வது தடுக்கப்படும். அது 20 சதவீதமாக இருந்தால் இரு தலைமுறைகள் மேலே வருவது தடுக்கப்படுகிறது. இதை மாற்றவும், அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தவும் தினமும் பா.ஜ.க. உழைத்து வருகிறது.
பா.ஜ.க.வுக்கு வருகிற பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவளிப்பார்கள். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது பெயருக்காக சொல்லப்படுகிறது. இலவச பஸ் குறைவான எண்ணிக்கையில் இயக்கப்படுகிறது. இதனால் அதனை நம்பி வேலைக்கு செல்லும் பெண்கள் சிரமப்படுகின்றனர்.
பால் விலை, மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் மக்கள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர். ஊழல் இல்லாத ஆட்சியை தமிழக பா.ஜ.க. வழங்கும். அப்போது மிக பெரிய மாற்றம் தமிழகத்தில் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






