திருக்கோவிலூர் பகுதியில்கொள்ளை, நகைப்பறிப்பில் ஈடுபட்ட பா.ஜ.க. நகர செயலாளர் கைது
திருக்கோவிலூர் பகுதியில் கொள்ளை, நகைப்பறிப்பில் ஈடுபட்ட பா.ஜ.க. நகர செயலாளரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் பகுதிகளில் சமீப காலமாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து நகை பறிப்பு, பூட்டி வீட்டின் கதவை உடைத்து நகை கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன.
இந்த நிலையில் திருக்கோவிலூருக்கு வருகை புரிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், தொடர் கொள்ளையில் ஈடுபடும் நபர்களை அடையாளம் கண்டு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார், கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
வாகன சோதனை
இந்நிலையில் நேற்று முன்தினம், தனிப்படை போலீசார், திருக்கோவிலூர் சந்தப்பேட்டை புறவழிச் சாலை அருகே உள்ள அய்யனார் கோவில் அமைந்துள்ள பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை, சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர், முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
பா.ஜ.க. நகர செயலாளர்
இதையடுத்து அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், அவர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டு பகுதியை சேர்ந்த அறிவழகன் (வயது 40) என்பவதும், இவர் பா.ஜ.க.வில் நெல்லிக்குப்பம் நகர செயலாளராக இருப்பதும் தெரியவந்தது. மேலும் திருக்கோவிலூரில் நடந்த நகை பறிப்பு சம்பவங்கள், திருக்கோவிலூர் அருகே உள்ள நெடுமுைடயான் கிராமத்தில் 2 வீடுகள், சந்தைப்பேட்டையில் உள்ள ராணுவ வீரர் வீட்டிலும் அறிவழகன் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அறிவழகனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3½ பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.