அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்- ஆர்ப்பாட்டம்


அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல்- ஆர்ப்பாட்டம்
x

தஞ்சை மாவட்ட பகுதிகளில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட பகுதிகளில் பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கும்பகோணம்

அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக சென்னையில் பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை உள்பட தொண்டர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜனதா நிர்வாகிகள் வேதா செல்வம், சுரேஷ், பொன்ராஜ் தேவர் மற்றும் பலர் கலந்து கொண்டு மாநில அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

கும்பகோணம் அருகே உள்ள திப்புராஜபுரம் கடைவீதியில் நேற்று இரவு அண்ணாமலை கைதை கண்டித்து பா.ஜனதா ஊரக வளர்ச்சி உள்ளாட்சி பிரிவு துணை தலைவர் பழனி குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதே போல் நாச்சியார் கோவில் கடைவீதியில் பா.ஜனதா ஒன்றிய தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாபநாசத்தில் சாலை மறியல்

அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாபநாசத்தில் பா.ஜனதா ஒன்றிய தலைவர் செல்வம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற நகர தலைவர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பிரபு, பரசுராமன் உள்பட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

அய்யம்பேட்டையில் பா.ஜ.க.வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதற்கு மாநில செயற்குழு உறுப்பினர் வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில் மேற்கு ஒன்றிய செயலாளர் குமார் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

பேராவூரணி

பேராவூரணியில் பா.ஜனதா கட்சியினர் மாவட்ட பொதுச் செயலாளர் வீரா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொதுக்குழு உறுப்பினர் வேலுச்சாமி, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் குகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஊரணிபுரம்

ஊரணிபுரத்தில் பா.ஜனதா கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் திருவோணம் தெற்கு ஒன்றியத் தலைவர் காளிமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தின் போது, அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டது.

திருவிடைமருதூர்

திருவிடைமருதூர் கடைவீதியில் நேற்று இரவு அண்ணாமலை கைதை கண்டித்து தஞ்சை வடக்கு மாவட்ட துணைத்தலைவர் கிளி ராஜேந்திரன் தலைமையில் திரண்ட பா.ஜனதா கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர்.

அம்மாப்பேட்டை

அம்மாப்பேட்டை நால்ரோடு தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் தெற்கு ஒன்றிய பா.ஜனதா தலைவர் அருண் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் மாவட்டச் செயலாளர் துரை மூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story