பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் பஸ்சில் பாய்ந்து தற்கொலை


பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் பஸ்சில் பாய்ந்து தற்கொலை
x
தினத்தந்தி 14 Jun 2023 12:45 AM IST (Updated: 14 Jun 2023 11:30 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் பஸ்சில் பாய்ந்து தற்கொலை

கோயம்புத்தூர்

கோவை

கோவை பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர் சிறிது நேரம் கழித்து அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவர் யார் என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்

கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான, பா.ஜனதா கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன் அலுவலகம் கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகம் அருகில் உள்ளது. இந்த அலுவலகத்தில் நேற்று மாலை 5.50 மணி அளவில் மர்ம நபர் ஒருவர் புகுந்தார். பின்னர் அந்த மர்ம நபர் திடீரென்று எம்.எல்.ஏ. அலுவலகத்தின் கதவை பூட்ட முயன்றார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு பணியில் இருந்த ஊழியர் ஒருவர் அந்த மர்ம நபரை கட்சி அலுவலகத்தை விட்டு வெளியே தள்ளினார். இதில் நிலைதடுமாறிய அந்த மர்ம நபர் தடுமாறி கீழே விழுந்தார். பின்னர் அவர் எழுந்து அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் குறித்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலக ஊழியர் உடனடியாக ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

உடல் மீட்பு

இதனிடையே நேற்று முன்தினம் இரவில் அவினாசி ரோட்டில் உள்ள ஜி.டி.மியூசியம் அருகில் ஒருவர் வாகனத்தில் அடிபட்டு இறந்து கிடப்பதாக போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போக்குவரத்து கிழக்கு புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் முதற்கட்டமாக இறந்து கிடந்த நபரும், பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த நபரும் ஒருவர்தான் என தெரியவந்தது. இதனால் பரபரப்பு நிலவியது. இதன்பின்னர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அந்த வழியாக சென்ற அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

கண்காணிப்பு கேமரா

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் கூறும்போது, பா.ஜனதா எம்.எல்.ஏ. அலுவலகத்தில் புகுந்த நபர், அவினாசி ரோடு ஜி.டி.மியூசியம் அருகே செல்லும் போது ஒரு அரசு பஸ்சில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். பஸ்சின் பின்சக்கரம் அவர் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். இதுகுறித்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. இதையடுத்து இந்த வழக்கு தற்கொலை வழக்காக மாற்றப்பட்டு ரேஸ்கோர்ஸ் போலீசில் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது. இறந்தவர் யார்? எந்த ஊர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கூறும்போது:- நேற்று மாலை எனது அலுவலகத்திற்குள் அடையாளம் தெரியாத நபர் வந்துள்ளார். அவர் எதற்காக வந்தார் என்பது தெரியவில்லை. அப்போது நான் அலுவலகத்தில் இல்லை. அந்த நபர் குறித்து உதவியாளர் எனக்கு தெரிவித்தார்.

இதையடுத்து போலீசில் புகார் அளிக்கும்படி அவரிடம் கூறினேன். அவரும் அதன்படி புகார் அளித்தார். இந்த நிலையில் அலுவலகத்திற்குள் நுழைந்த நபர் அவினாசி ரோட்டில் இறந்து கிடப்பதாக தகவல் தெரியவந்தது. அவர் யாரென்று தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.




Related Tags :
Next Story