பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதை தடுக்க வேண்டும் - காங். கட்சியினருக்கு சசி தரூர் அறிவுறுத்தல்


பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதை தடுக்க வேண்டும் - காங். கட்சியினருக்கு சசி தரூர் அறிவுறுத்தல்
x

பாஜக மீண்டும் ஆட்சியமைப்பதை தடுக்க வேண்டும் என்று காங். கட்சியினருக்கு சசி தரூர் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தலைவர் பதவிக்கு போட்டியிடும் கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரும் நாடு முழுவதும் சென்று காங்கிரஸ் கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகம் வந்துள்ள சசி தரூர், சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் சந்தித்து ஆதரவு திரட்டினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் சசி தரூர் கூறியதாவது:-

ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை பாதயாத்திரை மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. தலைவர் பதவிக்கு நடைபெறும் தேர்தல் நட்பு ரீதியானது. இதில் யார் வெற்றி பெற்றாலும் அது கட்சிக்கான வெற்றி தான். காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியின் குடும்பம் யாருக்கும் ஆதரவளிக்காததை வரவேற்கிறேன்.

2024-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க காங்கிரஸ் கட்சியினர் தயாராக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் இளைஞர்களுக்கு முக்கியதுவம் அளிக்க விரும்புகிறேன். கட்சியில் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story