பா.ஜ.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முற்றுகை
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 350-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட 350-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முற்றுகையிடும் போராட்டம்
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் சனாதன தர்மத்தை ஒழிப்பதே என் வேலை எனக்கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், அந்த மேடையில் இருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும் திருவண்ணாமலை திருவூடல் தெருவில் அமைந்துள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் இன்று நடைபெற்றது.
போராட்டத்திற்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஆர்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர்கள் திருவூடல் தெருவில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் கோ.வெங்கடேசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
பின்னர் அவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட பார்வையாளர் தசரதன், அமைப்பு கோட்ட செயலாளர் குணசேகரன், முன்னாள் மாவட்ட தலைவர் நேரு, மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ், மாவட்ட துணைத்தலைவர்கள் டி.சிவசங்கரன், கவிதா, பிரதிஷ், அருணைஆனந்தன், ராஜ்குமார், மாநில உள்ளாட்சி தேர்வு செயலாளர் அறவாழி, மாவட்டச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, குமரன், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், இந்து முன்னணி மாவட்ட தலைவர் அருண், விசுவ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், வர்த்தக அணி தலைவர் வினோத்கண்ணா உள்பட மாவட்ட நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
350 பேர் கைது
தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அலுவல கத்தை முற்றுகையிட சென்றனர். முன்னதாக அந்த பகுதியில் திருவண்ணாமலை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இரும்பு வேலி கொண்ட பேரிகார்டுகள் சாலையில் நடுவே வைக்கப்பட்டு இருந்தது. முற்றுகையிட சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் அவர்கள் போலீசார் வைத்திருந்த பேரிகார்டுகளையும் தள்ளியபடி சென்றனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 350-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணி காந்தி ரோட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் அலுவலகத்தின் முன்பு பா.ஜ.க. நகர தலைவர் ஜெ.ஜெகதீசன் தலைமையில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டனர்.
இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, மகேந்திரன் மற்றும் போலீசார் ஒரு பெண் உள்பட 26 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.
வந்தவாசி
வந்தவாசி கோட்டை தெருவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தவாசி பழைய பஸ் நிலையம் எதிரில் நகரத்தலைவர் சுரேஷ் தலைமையில் பா.ஜ.க.வினர் கூடினர். இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் பி.முத்துசாமி, எஸ்.ஏ.ஜி.துரை, வி.குருலிங்கம், நவநீதி, சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அங்கேயே அவர்களை வந்தவாசி தெற்கு போலீசார் தடுத்து நிறுத்தி 42 பேரை கைது செய்தனர்.
போளூர்
போளூரில் மாவட்ட தலைவர் சி.ஏழுமலை தலைமையில் பா.ஜ.க.வினர் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து 60-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.