நிர்வாகிகள் கைதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நிர்வாகிகள் கைதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கும்பகோணம், திருவிடைமருதூரில் நிர்வாகிகள் கைதை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
8 பேர் கைது
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சாக்கோட்டை பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு சரியான சாலை வசதி இல்லை எனவே அகலமான சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை வடக்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் சதீஷ்குமார் தலைமையில் அக்கட்சியினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதனை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் கும்பகோணம் காந்தி பூங்கா அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தஞ்சை வடக்கு மாவட்ட பார்வையாளர் பண்ணைவயல் இளங்கோ தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சோழராஜன், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேசிய செயற்குழு உறுப்பினர் தங்கவரதராஜன், மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஏராளமான பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டு போலீசாரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
திருவிடைமருதூர்
அதேபோல் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் கடைவீதியில் பா.ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.