நாமக்கல் மாவட்டத்தில்விலைவாசி உயர்வை கண்டித்து பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


தினத்தந்தி 23 July 2023 7:00 PM GMT (Updated: 23 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் விலைவாசி உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல்

தி.மு.க. அரசை கண்டித்தும், விலைவாசி உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜனதா சார்பில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் வார்டுகள் மற்றும் ஊராட்சிகள் தோறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டத்தில் வார்டு அளவிலும், ஊராட்சி அளவிலும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நாமக்கல் நகராட்சி 20-வது வார்டு பொய்யேரிக்கரை மதுரைவீரன் கோவில் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் மனோகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் நிர்வாகிகள் திருவேங்கடம், முத்து, கவுரிசங்கர், மணிவண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை கண்டிக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்தும், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, பத்திரப்பதிவு கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

ராசிபுரம்

ராசிபுரம் 25-வது வார்டில் உள்ள வனத்துறை அலுவலகம் அருகே பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பா.ஜ.க. மாநில துணைத்தலைவரும், சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். நகரத்தலைவர் வேல்முருகன், வக்கீல்கள் கார்த்திகேயன், குமார் மற்றும் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் 16-வது வார்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் சேதுராமன், கிளைத்தலைவர் சுப்பிரமணியம் உள்பட பலர் கலந்து கொண்டனர். 22-வது வார்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நகரத்தலைவர் வேல்முருகன், கிளைத்தலைவர் சுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகரத்தில் உள்ள 27 வார்டுகளில் 17-வது வார்டை தவிர மற்ற அனைத்து வார்டுகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பா.ஜ.க.வினர் தரளாக கலந்து கொண்டனர்.

மோகனூர் ஒன்றியம்

இதேபோல் நாமக்கல் நகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட கொண்டிசெட்டிப்பட்டியில் நகர தலைவர் சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் விவசாய அணி மாநில செயலாளர் ராதிகா, நகர செயலாளர் வேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மோகனூர் ஒன்றிய பகுதியில் அந்தந்த ஊராட்சி மன்ற அலுவலகம் முன்ப பா.ஜ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆரியூர் ஊராட்சியில் கிழக்கு ஒன்றிய தலைவர் செல்வமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மேலும் மோகனூர் பேரூராட்சி அலுவலகம் முன், குமரிபாளையம், ஆண்டாபுரம், லத்துவாடி, வளையப்பட்டி உள்பட பல்வேறு ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மோகனூர் மேற்கு ஒன்றியம் சார்பில் மகளிர் அணி தலைவி ரேவதி தலைமையில் எஸ்.வாழவந்தியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை

நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம் பச்சுடையாம்பாளையம் ஊராட்சி அலுவலகம் அருகே மாவட்ட பா.ஜ.க. சிறுபான்மை பிரிவின் சார்பில் தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஷாஜகான் தலைமை தாங்கினார். கிளை தலைவர் கண்ணன், துணைத்தலைவர் அலாவுதீன் செயற்குழு உறுப்பினர் ஷகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய நிர்வாகிகள் மோகன், ராஜேந்திரன, நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. சிறுபான்மை பிரிவை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

கொல்லிமலை ஒன்றியம் வளப்பூர் நாடு ஊராட்சியில் உள்ள பெரிய கோவிலூரில் பா.ஜனதா ஒன்றிய செயலாளர் கார்த்திக் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராகவும், அனைத்து பெண்களுக்கும் உரிமைத்தொகை வழங்ககோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பள்ளிபாளையம்

பள்ளிபாளையம் நகர, ஒன்றிய பா.ஜனதா சார்பில் பள்ளிபாளையம் போலீஸ் நிலையம் அருகே, மாதேஸ்வரன் கோவில் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜனதாவினர் பலர் கலந்து கொண்டனர். பள்ளிபாளையம் ஒன்றியத்தில் மொத்தம் 10 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story