இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பா.ஜ.க.வினர் போராட்டம் -300-க்கும் மேற்பட்டவர்கள் கைது
மதுரையில் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மதுரையில் போராட்டம் நடத்திய பா.ஜ.க.வை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
தி.மு.க. அமைச்சர்களை கண்டித்து பா.ஜ.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் மதுரையில் எல்லீஸ்நகரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல கமிஷனர் அலுவலகம் அருகே நேற்று மதியம் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை மாநகர் மாவட்ட தலைவர் மகாசுசீந்திரன் தலைமையில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தி.மு.க. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் பதவி விலக ேகாரி கோஷமிட்டபடி ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்வதால் அவர்களை கைது செய்ய முடிவு செய்தனர். அதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவர்களை கைது செய்ய தொடங்கினர்.
300-க்கும் மேற்பட்டவர்கள் கைது
எனவே மகாசுசீந்திரன் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறிய லில் ஈடுபட்ட பா.ஜ.க.வை சேர்ந்த பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இதில் மாநில பொதுச்செயலாளர் ராஜ்குமார், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தலைவர் திருமாறன், மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் பிரபு மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதே போன்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் ஜான்சிராணிபூங்கா அருகே கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் ஆலய பிரிவு தலைவர் தர்மலிங்கம், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் தங்கவேல்சாமி முன்னிலையில் பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று தி.மு.க. அமைச்சர்களுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் போலீசார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க.வை சேர்ந்த 107 பேரை கைது செய்தனர். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் மதுரையில் 2 இடங்களில் 300-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.