'இந்தியா' கூட்டணியை பிரிக்க பா.ஜனதா சதி- சுப்புராயன் எம்.பி. குற்றச்சாட்டு
‘இந்தியா’ கூட்டணியை பிரிக்க பா.ஜனதா சதி செய்வதாக சுப்புராயன் எம்.பி. குற்றம்சாட்டி உள்ளார்.
நெல்லை சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். துணை செயலாளர்கள் சேதுராமலிங்கம், முத்துகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் சடையப்பன் வரவேற்று பேசினார். மாநில கட்டுப்பாட்டு குழு தலைவர் சுப்புராயன் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், ''மத்திய அரசு மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து வருகிற 12-ந்தேதி நெல்லையிலும், 13-ந்தேதி வள்ளியூரிலும், 14-ந்தேதி அம்பையிலும் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் கட்சியினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு இருந்தால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்திருக்காது. தற்போது இணைந்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. எதிர்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணியின் ஒற்றுமையை குலைக்க பா.ஜனதா பல்வேறு சதி வேலைகளை செய்து வருகிறது. எனவே இடதுசாரிகள் ஒன்றுபட வேண்டும்'' என்றார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தானம், ஏ.ஏ.டி.யு.சி. மாநில தலைவர் காசிவிசுவநாதன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் ரெங்கன், ராமகிருஷ்ணன், முருகன், பரமசிவன், கிருஷ்ணன், உலகநாதன், பெருமாள்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் முருகன் நன்றி கூறினார்.