தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு: பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேருக்கு சம்மன் - விசாரணைக்கு நாளை ஆஜராக சிதம்பரம் போலீஸ் உத்தரவு


தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு: பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேருக்கு சம்மன் - விசாரணைக்கு நாளை ஆஜராக சிதம்பரம் போலீஸ் உத்தரவு
x
தினத்தந்தி 3 July 2023 12:15 AM IST (Updated: 3 July 2023 12:50 PM IST)
t-max-icont-min-icon

தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேர் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்த ஆனித்திருமஞ்சன விழாவின்போது 4 நாட்கள் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுத்து தீட்சிதர்கள் சார்பில் பதாகை வைக்கப்பட்டது. இதையறிந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கனகசபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்றனர். இதை தடுத்த தீட்சிதர் ஒருவரை அதிகாரிகள் தாக்கி, பூணூலை அறுத்ததாக தி கம்யூன் என்ற டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிடப்பட்டிருந்தது. இதனால் பிரச்சினை ஏற்படும் சூழல் உருவானதால் மேற்கண்ட கருத்தை பதிவிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கிராம நிர்வாக அலுவலர் ஷேக் சிராஜூதின் சிதம்பரம் நகர போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கவுசிக் சுப்பிரமணியன் ஆகியோர் த கம்யூன் என்ற டுவிட்டர் கணக்கை நிர்வகித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதரை தாக்கிய விவகாரம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியது தொடர்பாக பா.ஜ.க. மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மற்றும் கவுசிக் சுப்பிரமணியன் ஆகியோர் நாளை (செவ்வாய்க்கிழமை) சிதம்பரம் நகர போலீசில் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனா்.


Next Story