பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம்
வேலூர் மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே பாரதீய ஜனதா கட்சியின் 18-வது வார்டு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு மாநகர 2-வது மண்டல தலைவர் கோபி தலைமை தாங்கினார். 18-வது வார்டு தலைவர் முருகன் வரவேற்றார். மாவட்ட தலைவர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர்கள் எம்.ஜெகன்நாதன், எஸ்.எல்.பாபு, மாவட்ட செயலாளர் எஸ்.ஜெகன்நாதன், 18-வது வார்டு கவுன்சிலர் சுமதிமனோகரன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
உண்ணாவிரத போராட்டத்தில், 18-வது வார்டின் வளர்ச்சி பணியில் கவுன்சிலருக்கு, மாநகராட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்காததை கண்டித்தும், மக்களை வஞ்சிக்கும் மாநகராட்சியை கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மேலும் 18-வது வார்டில் உள்ள சாமுவேல் நகர் மக்களுக்கு ஓராண்டுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் பின்புறம் உள்ள சாலை, தண்டுமாரியம்மன் கோவில் சாலை கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை சரிசெய்ய வேண்டும். கானாறு தெரு, பள்ளி தெரு, மடம் தெரு, சன்னதிதெரு உள்ளிட்ட தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான தோண்டப்பட்டப்பட்டதால் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதை சரிசெய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பேசினர்.
இதில் அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் வெங்கடேசன் மற்றும் ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.