பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம்

பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
ஆலங்குடி நகரின் மையப்பகுதியில் நாடியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் இடங்களை ஆக்கிரமித்து தனிநபர்கள் பலர் கட்டிடங்கள் கட்டியுள்ளதாக கூறி திருவரங்குளம் ஒன்றிய பா.ஜ.க.வினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம், நாடியம்மன் கோவில் குளத்தில் லாரிகளில் மணல் கொட்டப்பட்டு இருந்தது. இந்தநிலையில், நாடியம்மன் கோவில் குளத்தை கோவில் நிர்வாகம் மணலை கொட்டி மூட முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தின் நடவடிக்கையை கண்டித்து பா.ஜ.க.வினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து புதுக்கோட்டை மாவட்ட இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா, அறந்தாங்கி துணை ேபாலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் (பொறுப்பு), ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை, ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் துரைகண்ணு, கிராம நிர்வாக அலுவலர் புஷ்பராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் குளத்தை மூடுவதற்கு கொட்டப்பட்ட மண்ணை உடனே அள்ளுவதாகவும், இதுகுறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு கொண்டு செல்வதாகவும் கூறியதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






