கண்களில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்


கண்களில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டம்
x

ராமநாதபுரத்தில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் கண்களில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றுத்திறனாளிகள்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு கீழக்கரை தாலுகா அலுவலகம் சார்பில் பார்வை குறைபாடு உடைய குழந்தைகளுக்கு மற்றும் பெரியவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், பல மாதங்களாகியும் கீழக்கரை தாசில்தார் அலுவலகமும், ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பார்வை குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

போராட்டம்

இந்நிலையில் நேற்று காலை தங்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் வந்தனர். இவர்கள் தங்களின் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன போராட்டம் நடத்தினர். அதனை தொடர்ந்து அனைவரும் ஊர்வலமாக சென்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பியவாறு மாவட்ட கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தங்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு வந்துபோராட்டத்தில் ஈடுபட்டதாக மாற்றுத்திறனாளிகள் தெரிவித்தனர். இவர்களிடம் மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.


Next Story