குறு, சிறு தொழில்நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை சிறு, குறு தொழில்நிறுவனங்களில் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கோவை சிறு, குறு தொழில்நிறுவனங்களில் நேற்று கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்பட்டது.
மின் கட்டண உயர்வு
தமிழக அரசு சமீபத்தில் மின் கட்டண உயர்வை அறிவித்தது. மேலும் பீக்ஹவர் மின் கட்டணமும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மின் கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி தொழில் துறையினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம், விரைவு தபால் அனுப்பும் போராட்டம், உண்ணாவிரத போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் தொடர்ச்சியாக சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களில் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
கருப்பு கொடி ஏற்றினர்
இதன்படி கோவை இடையர்பாளையம், கணபதி, காளப்பட்டி, நீலாம்பூர் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டன. மேலும் அங்கு பணிபுரிந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று காலை கருப்பு சட்டை அணிந்து கலெக்டர் அலுவலகத்திற்கு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். நிர்வாகிகள் மட்டும் கலெக்டரை சந்தித்து மனு அளிக்கும் படி போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து ஒருங்கிணைப்பாளர்கள் ஜேம்ஸ், ஜெயபால், சுரேஷ், சங்கரநாராயணன், சாகுல் ஹமீது உள்ளிட்ட நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். இதன்பின்னர் நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாடு மின்சார வாரியம் கடந்த ஆண்டு நிலைக்கட்டணத்தை 430 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும் பயன்பாட்டுக்கான ஒரு யூனிட்டுக்கான கட்டணத்தை 1 ரூபாய் 65 காசு உயர்த்தியும், பீக்ஹவர் கட்டணத்தை புதிதாக அறிவித்தும் உள்ளது. இதனால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் 12 கிலோ வாட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 3 பியில் இருந்து 3 ஏ1 பிரிவின் கீழ் இணைப்பு மாற்றுதல் என்ற கோரிக்கை மட்டுமே அரசு ஏற்றுள்ளது.
எனவே எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அடுத்த கட்டமாக சென்னையில் வருகிற 16-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. இதில் 25 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.