கல்குவாரிகளில் வெடி வைப்பதால் விவசாய பணிகள் பாதிப்பு
கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் கல் குவாரிகளில் வெடி வைப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் கல் குவாரிகளில் வெடி வைப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டரிடம் விவசாயிகள் புகார் மனு அளித்தனர்.
மக்கள் தொடர்பு முகாம்
கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் நெம்பர் 10 முத்தூர், தேவராயபுரம், சிங்கையன்புதூர், சொக்கனூர், வடபுதூர் உள்ளிட்ட பல பகுதியில் உள்ள கல் குவாரிகளில் விதியை மீறி இரவு நேரங்களில் கல்குவாரிகளில் வெடி வைக்கிறார்கள்.
பகல்நேரங்களில் அதிக சத்தத்தில் வெடி வெடிக்கின்றனர். வெடித்து சிதறும் பாறைகள் விளைநிலங்களில் விழுகிறது. இதனால் விவசாய பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
மேலும் லாரி உள்ளிட்ட கனரக வாகங்களில் அளவுக்கு அதிகமாக கற்களை ஏற்றி செல்வதால் சாலைகள் சேதம் அடைகின்றன. மேலும் விபத்து அபாயம் உள்ளதாக 15-க்கும் மேற்பட்ட மனுக்கள் கலெக்டர் சமீரனிடம் கொடுக்கப்பட்டது.
மேலும் இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் உதவித் தொகை, ரேஷன் கார்டுகள், பட்டா மாறுதல் உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 221 மனுக்கள் மாவட்ட கலெக்டரிடம் வழங்கப்பட்டது.
தொழிலாளர்கள் அச்சம்
கிணத்துக்கடவு தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மல்லிகா, தலைமையிடத்து துணை தாசில்தார் முத்து, துணை தாசில்தார்கள் ராமராஜ், சிவக்குமார் தலைமையில் ஊழியர்கள் மனுக்களை அந்தந்த துறைகளுக்கு பிரித்து அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
மனு அளித்த விவசாயிகள் கூறுகையில், கிணத்துக்கடவு மேற்கு பகுதியில் விதிகளை மீறி செயல்படும் கல் குவாரிகளால் பயிர்கள் சேதம் அடைகின்றன.
விளைநிலங்களில் கற்கள் விழுவதால் தொழிலாளர்கள் அச்சப்படும் நிலை உள்ளது என்றனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.