பிளீச்சிங் பவுடர் குடோன் எரிந்து சேதம்


பிளீச்சிங் பவுடர் குடோன் எரிந்து சேதம்
x
தினத்தந்தி 1 Jun 2023 6:45 PM GMT (Updated: 1 Jun 2023 6:45 PM GMT)

விக்கிரவாண்டி அருகே பிளீச்சிங் பவுடர் குடோன் எரிந்து சேதம் 3 ஆடுகள் கருகி செத்தன

விழுப்புரம்

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டியை அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது 32). இவர் அதே பகுதியில் தனக்கு சொந்தமான ரைஸ் மில் குடோனில் பிளீச்சிங் பவுடர் மூட்டைகளை அடுக்கி இருப்பு வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று மாலை 6:30 மணி அளவில் திடீரென குடோன் தீப்பிடித்து எரியதொடங்கியது. உள்ளே இருந்த மூட்டைகள் வெடித்து சிதறியதால் தீ கொழுந்து விட்டு எரிந்தது. மேலும் தீயில் பிளீச்சிங் பவுடர்கள் உருகி எரிமலை குழம்பு போல நான்கு புறமும் ஆறாக பாய்ந்து ஓடியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் வசித்த மக்கள் வீடுகளை பூட்டிவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது பற்றிய தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் மற்றும் நிலைய அலுவலர் சுந்தர்ராஜன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் குடோனுக்கு அருகில் உள்ள வீ்ட்டில் கட்டிப்போட்டிருந்த 3 ஆடுகள் தீயில் கருகி செத்தன. மேலும் வைக்கோல் போர் ஒன்றும் எரிந்து சாம்பலானது.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை? இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story