கண்மாயில் தண்ணீர் இருந்தும் கருகும் நெற்பயிர்கள்- மடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


கண்மாயில் தண்ணீர் இருந்தும் கருகும் நெற்பயிர்கள்- மடைகளை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2023 12:15 AM IST (Updated: 12 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடைகள் சீரமைக்கப்படாததால் நீர்வரத்து இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

சிவகங்கை

இளையான்குடி

இளையான்குடி அருகே கண்மாயில் தண்ணீர் இருந்தும் மடைகள் சீரமைக்கப்படாததால் நீர்வரத்து இன்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

நெல் விவசாயம்

இளையான்குடி அருகே குமாரக்குறிச்சி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 2300 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்து வருகின்றனர். குமாரக்குறிச்சி, பெருமச்சேரி, காந்திநகர், உலகமணியேந்தல், அதிகரை ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் எமனேஸ்வரம் பெரிய கண்மாயின் வைகை பாசன நீரினை பயன்படுத்தி விவசாயம் செய்கின்றனர். ஆனால் இந்த கண்மாயின் 7 மடைகளில் 2 மடைகளில் மட்டுமே தண்ணீர் சிறிதளவு வருகின்றது. தற்போது இருக்கும் தண்ணீரை பயன்படுத்தி பருத்தி, மிளகாய் போன்ற பயிர்களை விவசாயம் செய்து வருகின்றனர். கண்மாயின் நீர்ப்பாசன மடைகள் சேதமடைந்துள்ளதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் நாகராஜன் கூறும்போது, மடைகளை சீரமைக்க சென்ற வருடமே ஒப்பந்ததாரர் பணிகளை செய்ய தொடங்கும்போது முன்கூட்டியே மழை பெய்ததால் மடைகளை இடித்து புதிய மடை கட்ட இயலாத சூழ்நிலை இருந்தது. இந்த வருடம் கண்மாயில் தண்ணீர் இருப்பதால் தண்ணீரை வெளியேற்றி பின்னர் மடைகளை சீரமைக்க முடியும் என கூறினார்.

மடைகள் சேதம்

மேலும் 2 மடைகள் வழியே நீர்ப்பாசன வாய்க்கால்கள் குமாரக்குறிச்சி கிராமத்தின் இருபுறமும் செல்கின்றன. கிராமத்தின் வழியே செல்லும் வாய்க்கால்கள் சீரமைக்கப்படாமல் உள்ளதால் நெல் விவசாயம் செய்துள்ள விவசாயிகள் நீரினை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் ஊரின் தெற்கு பகுதியில் நீர் பாசன வாய்க்கால் நெடுஞ்சாலைத்துறை சாலையின் நடுவே செல்வதால் மண்ணில் புதைந்து மடை இருக்கும் இடம் தெரியாமல் காணப்படுகின்றது. கடந்த 5 வருடத்திற்கு மேல் இப்பகுதியில் கண்மாய் பாசன விவசாயிகள் தண்ணீரின்றி விவசாயம் அழிந்து வருவதாக கூறுகின்றனர்.

மண்ணில் புதைந்துள்ள மடை மற்றும் வாய்க்கால்களை நெடுஞ்சாலை துறையினர் சீரமைத்து தந்தால்தான் விவசாயம் செய்ய இயலும். இதனால் இந்த வாய்க்காலில் விவசாயம் செய்யும் 250 ஏக்கர் நிலம் நீர்ப்பாசன வசதியின்றி அழிந்து வருகின்றன என்றார்.

விவசாயிகள் கோரிக்கை

எனவே, கண்மாயின் மடைகளை இடித்து புதிய மடைகள் கட்டித்தர விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மண்ணில் புதைந்துள்ள மடையை நெடுஞ்சாலை துறையினர் அப்புறப்படுத்தி புதிய பாலம் அமைத்து நீர் பாசன வாய்க்காலை வெளிக்கொண்டு வர வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட நிலங்களை வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story