மத்திய அரசை கண்டித்து வங்கிகள் முற்றுகை-மறியல்


மத்திய அரசை கண்டித்து வங்கிகள் முற்றுகை-மறியல்
x

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வங்கிகளை முற்றுகையிட்டும், மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதையடுத்து 281 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை

வங்கி முற்றுகை

விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் 3 நாள் தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 2-ம் நாளான நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆலங்குடி வடகாடு முக்கத்தில் மாவட்ட செயலாளர் இந்திராணி மற்றும் ஒன்றிய செயலாளர் திலகர் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் செல்வராசு, மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக ஆலங்குடி பாரத ஸ்டேட் வங்கி நோக்கி வந்தனர். பின்னர் வங்கியை முற்றுகையிட்டு ேகாஷம் எழுப்பினர்.

கோஷம்

அப்போது விலைவாசியை பாதியாக குறைப்பேன், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு, கருப்பு பணத்தை மீட்டு குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் வழங்குவது என்று மோடி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரிசி, சமையல் எண்ணை இரு மடங்கு விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை ஏற்றம், அனைத்து பொருட்களின் விலை உயர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதையடுத்து முற்றுகையிட்ட 36 பேரை ஆலங்குடி போலீசார் கைது செய்து அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

கீரமங்கலம்

கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை செயலாளர் செல்வக்குமார் முன்னிலையில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கீரமங்கலம் சிவன் கோவில் வளாகத்திலிருந்து பல்வேறு முழக்கங்களுடன் ஊர்வலமாக சென்று தேசியமயமாக்கப்பட்ட வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் வங்கியை முற்றுகையிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து வங்கிக்குள் நுழைய முயன்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 101 பெண்கள் உள்பட 143 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாதவன் தலைமையில், நிர்வாகிகள் ஊர்வலமாக குறிச்சிக்குளத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 46 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

கறம்பக்குடி

கறம்பக்குடி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கறம்பக்குடி சீனிகடை முக்கத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமை தாங்கினார்.இதில் கலந்து கொண்ட 19 பெண்கள் உள்பட 56 பேரை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story