பா.ஜனதாவினர் சாலைமறியல்
தென்காசியில் பா.ஜனதாவினர் சாலைமறியல் போராட்டம் நடத்தினர்.
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை பா.ஜ.க.வினர் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் அவர்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனே போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த போராட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், அருள்செல்வன், ராமநாதன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமராஜா, அன்புராஜ், அண்டை மாநில வெளிநாடு தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில துணைத்தலைவர் ஏ.ஆனந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 127 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதுபற்றி பா.ஜனதாவினர் கூறும்போது, தென்காசி சிந்தாமணி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வக்கீலான இவர் பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் அதே பகுதியில் உள்ள ஒரு கோவில் கொடை விழாவுக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு ராஜ்குமாருக்கும், மற்றொருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு தாக்கப்பட்டதில் ராஜ்குமாரின் முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது, என்றனர்.