அரசு பஸ்சை மறித்து சாலை மறியல்
கோடங்குடி ஊராட்சியில் அரசு பஸ்சை மறித்து சாலை மறியல் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை அருகே கோடங்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து தார்ச்சாலைகளும் குண்டும் குழியுமாகவும், கப்பிகற்கள் பெயர்ந்தும் செப்பனிடப்படாமல் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பிருந்தே மயிலாடுதுறை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரிடமும் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்துள்ளதாகவும் ஆனாலும் சாலைகள் தற்போது வரை சீரமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் திடீர் என சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறையில் இருந்து கோடங்குடிக்கு செல்லும் ஒரே ஒரு அரசு டவுன் பஸ்சை திடீரென சிறைபிடித்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பெரம்பூர் போலீசார் மற்றும் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்பட பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.