மலேரியாவால் 6 வயது பெண் குழந்தை பலி: தூத்தூர் பகுதியில் 60 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை
மலேரியாவால் 6 வயது பெண் குழந்தை பலியான சம்பவத்தை தொடர்ந்து தூத்தூர் பகுதியில் 60 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொல்லங்கோடு,
மலேரியாவால் 6 வயது பெண் குழந்தை பலியான சம்பவத்தை தொடர்ந்து தூத்தூர் பகுதியில் 60 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளும் அங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
குழந்தை பலி
நித்திரவிளை அருகே உள்ள தூத்தூர் அல்போன்சா தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் நைஜீரியா நாட்டில் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் கடந்த 30 ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்து பணியாற்றி வருகிறார். ஆலய திருவிழா, திருமண நிகழ்ச்சி, பண்டிகை நாட்களில் மட்டும் பங்கேற்க அவர் குடும்பத்தினருடன் சொந்த ஊர் வந்து செல்வது வழக்கம்.
இதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடுவதற்காக சமீபத்தில் என்ஜினீயர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊர் வந்திருந்தார். இந்தநிலையில் அவருடைய 6 வயது பெண் குழந்தைக்கு முதலில் லேசான காய்ச்சல் ஏற்பட்டது. பின்னர் அதிக காய்ச்சலால் அந்த குழந்தை பாதிப்புக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்து சிகிச்சை அளித்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அந்த குழந்தைக்கு மலேரியா காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.
60 பேருக்கு பரிசோதனை
இதையடுத்து என்ஜினீயரின் 9 வயது மகளும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். பின்னர் என்ஜினீயர் மற்றும் அவருடைய மனைவியும் பாதிப்புக்கு ஆளாகினர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் அவர்களுக்கும் மலேரியா காய்ச்சல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இருப்பினும் அதிக பாதிப்பு இல்லாததால் அவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.
இதைத்தொடர்ந்து மலேரியாவால் ஒரு குழந்தை உயிரிழந்த சம்பவம் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. உடனே நாகர்கோவிலில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் இருந்து மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி கின்ஷால் தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் தூத்தூர் பகுதிக்கு சென்று என்ஜினீயர் குடும்பத்தினர் தங்கிய வீட்டின் அருகில் உள்ள சுமார் 60 பேருக்கு ரத்த மாதிரி எடுத்து மலேரியா பரிசோதனை செய்தனர். ஆனால் இதில் யாருக்கும் மலேரியா பாதிப்பு இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.
குழந்தை இறந்தது எப்படி?
இருப்பினும் மலேரியா தடுப்பு மருந்து தெளிக்கும் பணியும், மலேரியா கொசுப்புழுக்களை ஒழிக்க புகை மருந்து தெளிக்கும் பணியும் அங்கு முழு வீச்சில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக கொள்ளை நோய் தடுப்பு அதிகாரி கின்ஷால் கூறியதாவது:-
நைஜீரியாவில் இருக்கும்போதே என்ஜினீயருக்கு மலேரியா காய்ச்சல் இருந்துள்ளது. அவர் அங்கு சிகிச்சை பெற்று நமது நாட்டுக்கு வந்துள்ளார். இறந்த 6 வயது குழந்தைக்கு கடந்த 2 வாரத்துக்கு முன்பே காய்ச்சல் இருந்துள்ளது. பரிசோதனை செய்யாமல் காய்ச்சல் மருந்து கொடுத்து அழைத்து வந்துள்ளனர். இங்கு காய்ச்சல் அதிகமான பிறகே தூத்தூர் பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்து சிகிச்சை அளித்துள்ளனர். அப்போதுதான் குழந்தைக்கு மலேரியா இருப்பது தெரிய வந்துள்ளது. அதிக பாதிப்பின் காரணமாக சிகிச்சை அளித்தும் பலன் இன்றி குழந்தை இறந்துள்ளது.
பாதிப்பு இல்லை
தற்போது மலேரியா பரவாமல் தடுக்க இன்டோ ரெசிடல் ஸ்பிரே என்ற மருந்து என்ஜினீயர் தங்கி உள்ள வீட்டிலும், அந்த வீட்டைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தெளித்துள்ளோம். மலேரியா கொசுப்புழுவை ஒழிக்க புகை மருந்தும் தெளிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.