சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ரத்த கையெழுத்து இயக்கம் நடத்தினர். நெமிலி ஒன்றிய சங்க தலைவர் தமிழ்ச்செல்வி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் யோகலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோகனம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முதல்-அமைச்சரின் காலை சிற்றுண்டி உணவு வழங்கும் திட்டத்தினை சத்துணவு ஊழியர்கள் மூலமாகவும் அமல்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள காலிபணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும். தேர்தல் கால வாக்குறுதியான காலமுறை ஊதியம், குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ரத்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இதில் 110-க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தினால் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை கலெக்டர் வாயிலாக தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சங்க பொருளாளர் தனம்மாள், துணைத்தலைவர் கலைச்செல்வி, இணைசெயலாளர் இந்திரா உள்பட சத்துணவு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.