பரங்கிப்பேட்டை அருகே நள்ளிரவில் கடலில் நீலநிறத்தில் ஒளிர்ந்த அலைகள்
பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டை கடலில் நள்ளிரவில் நீல நிறத்தில் அலைகள் ஒளிர்ந்தது.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் கடல் உள்ளது. கடலூர் சில்வர் பீச்சுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் இங்கு தான் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து, கடலில் குளித்துவிட்டு உற்சாகத்துடன் சென்று வருகிறார்கள்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் சாமியார்பேட்டை கடலில் நடந்து சென்ற சிலர், கடல் அலைகள் நீல நிறத்தில் ஒளியுடன் மினு, மினுப்பாக இருந்ததை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். இதையடுத்து அதை தங்களது காலால் விலக்கி விட்டனர். அப்போதும் கடல் அலைகள் பச்சை, நீல நிறம் அடங்கிய சயான் புளூ நிறத்தில் காட்சி அளித்துள்ளது. இதை அவர்கள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர்.
ஒளி உமிழும் பாக்டீரியாக்கள்
இந்த கடல் அலைகள் பச்சை மற்றும் நீல நிறத்தில் ஒளிர்ந்தற்கான காரணம் குறித்து பரங்கிப்பேட்டை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆறுமுகத்திடம் கேட்ட போது, நிலத்தில் வாழும் சில உயிரினங்கள் ஒளிரும் தன்மை கொண்டதாக இருக்கிறது. அதேபோல் கடலிலும் எண்ணற்ற உயிரினங்கள் ஒளிரும் தன்மையில் உள்ளது. இவை பெரும்பாலும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகள் ஆகும். இவற்றை தொலைநோக்கி மூலமாக தான் பார்க்க முடியும். இது உயிர் ஒளி உமிழக்கூடிய பாக்டீரியாக்கள் என்று அழைக்கப்படுகிறது.
சமீபத்தில் புதுச்சேரியில் செந்நிறத்தில் கடல் அலைகள் இருந்ததை பார்த்தோம். அதுவும் இதேபோல் உள்ள நுண்ணுயிரிகள் தான் காரணம். அவை டைனோபிலெஜெலீட்ஸ் என்னும் ஒரு வகை தாவர மிதவை உயிரிகளால் ஏற்படும் ஒருவகை நிகழ்வு அல்லது சிவப்பு அலை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த உயிரினங்கள் அதிக அளவு சத்துகளை உட்கொள்ளும் போது, இது போன்ற நிறத்தை ஏற்படுத்துகிறது.
அதேபோல் தான் பச்சை, நீல நிறத்தில் சாமியார்பேட்டை கடலில் தெரிந்துள்ளது. இவை பெரும்பாலும் கடற்கரையில் நிகழாது. ஆழ்கடலில் தான் இது போன்ற நிலை ஏற்படும். இவை 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரே இடத்தில் இருக்கும். பிறகு அந்த நுண்ணுயிரிகள் இடம் பெயர்ந்து சென்று கொண்டே இருக்கும். அதன்பிறகு மாறி விடும் என்றார்.