பி.எம்.-2 காட்டுயானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது
தேவாலா பகுதியில் 18 நாட்கள் போக்கு காட்டிய பி.எம்.-2 காட்டுயானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
கூடலூர்
தேவாலா பகுதியில் 18 நாட்கள் போக்கு காட்டிய பி.எம்.-2 காட்டுயானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பெண்ணை கொன்ற யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்பதற்காக வரும் காட்டுயானை ஒன்று, கடந்த சில ஆண்டுகளாக வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்து வந்தது.
இதற்கிடையில் அந்த யானை, தேவாலா அருகே வாழவயல் கிராமத்துக்குள் கடந்த மாதம் 19-ந் தேதி இரவு 9 மணிக்கு நுழைந்தது. தொடர்ந்து ஒரு வீட்டை உடைத்ததோடு பாப்பாத்தி (வயது 53) என்ற பெண்ணை தாக்கி கொன்றது. இதனால் அந்த யானையை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். உடனே தமிழக வன உயிரின முதன்மை பாதுகாவலர் சீனிவாச ரெட்டி உத்தரவின் பேரில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில் உதவி வன பாதுகாவலர் கருப்பையா, வனச்சரகர் சஞ்சீவ் உள்பட 60-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் பி.எம்.-2 யானையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
18 நாட்களாக...
மேலும் முதுலையில் இருந்து வசிம், விஜய், சுஜய், கிருஷ்ணா ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. கால்நடை டாக்டர்கள் ராஜேஷ் குமார், விஜயராகவன் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் மயக்க ஊசி செலுத்தும் துப்பாக்கிகளுடன் அந்த யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த யானை, கேரள எல்லை மற்றும் புளியம்பாரா, பாடந்தொரை வனப்பகுதிக்கு இடப்பெயர்ந்தவாறு வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.
இதனால் வனப்பகுதியில் மரங்களில் பரண் அமைத்து மயக்க ஊசியுடன் வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். நேற்று தேவாலா வனப்பகுதியில் பி.எம்.-2 யானை நிற்பதை வனத்துறையின் ஒரு குழுவினர் கண்டுபிடித்தனர். தொடர்ந்து நீடில்ராக் வனத்துக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த கால்நடை டாக்டர்கள் ராஜேஷ் குமார், விஜயராகவன் ஆகியோர் மதியம் 2 மணிக்கு யானை மீது மயக்க ஊசி செலுத்தினர்.
வனத்துறையினர் பிடித்தனர்
இதைத்தொடர்ந்து சிறிது தூரம் யானை ஓடியது. தொடர்ந்து பின்வந்த வனத்துறையினர் கும்கி யானைகள் உதவியுடன் யானையை மடக்கி பிடித்தனர். மேலும் யானையும் மயக்க நிலையை அடைந்ததால் வனத்துறையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இதற்கிடையே புளியம்பாரா கிராமத்தில் இருந்து சுமார் 1½ கி.மீ. தூரத்தில் யானை பிடிக்கப்பட்ட நிலையில், அதை லாரியில் கொண்டு செல்வதற்கு சாலை வசதி இல்லை.
இதனால் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. தொடர்ந்து கும்கிகள் உதவியுடன் காட்டு யானையை கயிறுகள் மூலம் கட்டி வனத்துறையினர் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் இழுத்து வந்தனர். அப்போது யானையும் எந்த பிரச்சினையும் இன்றி நடந்து வந்தது. தொடர்ந்து வனத்துறை லாரியில் யானை இரவு 7 மணிக்கு ஏற்றப்பட்டது. பின்னர் யானையின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டு, முதுமலை வனத்தில் விடப்பட்டது. இதனால் தேவாலா சுற்றுவட்டார பகுதி மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.