மோட்டார் சைக்கிள் மீது காட்டுப்பன்றி மோதல்; டிரைவர் பலி
மோட்டார் சைக்கிள் மீது காட்டுப்பன்றி மோதியதில், டிரைவர் பலியானார்.
மேட்டுப்பாளையம்,
சிறுமுகை அருகே பெத்திக்குட்டை புதுக்காட்டை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 35). இவர் புளியம்பட்டியில் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கனகராஜ் வேலையை முடித்த பின்னர், மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். இரும்பறை பெத்திக்குட்டை சாலையில் வந்தபோது, திடீரென குறுக்கே காட்டுப்பன்றி வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கனகராஜ் காட்டுப்பன்றி மீது மோதாமல் இருக்க, வேகத்தை குறைத்து உள்ளார். அப்போது மோட்டார் சைக்கிள் மீது காட்டுப்பன்றி மோதி விட்டு சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட கனகராஜ் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் கனகராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். ஆனால், செல்லும் வழியில் அவர் பரிதாதமாக இறந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.