பதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரிப்பு


பதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரிப்பு
x

பதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரித்து விட்டதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

ராமநாதபுரம்


பதிவு எண் இல்லாத படகுகளால் கடத்தல் அதிகரித்து விட்டதாக ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர் கூட்டத்தில் மீனவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அதிகாரி காமாட்சி கணேசன், மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மீனவர்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசியதாவது:-

சேசுராஜ்: மழைக்காலம் தொடங்க உள்ளதால் வானிலை நிலை கருதி மீன்பிடிக்க கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். இந்த தடையானது அனைத்து பகுதிகளுக்கும் ஒரேவிதமாக அறிவிக்க வேண்டும். எங்கள் பகுதிக்கு தடை விதிக்கப்பட்டு டோக்கன் வழங்கப்படாத நிலையில் புதுக்கோட்டை, ஜெகதாபட்டினம் பகுதியினருக்கு மட்டும் டோக்கன் வழங்கப்படுகிறது.

ஒரே பகுதியில் மீன்பிடிக்கும் எங்களுக்குள் ஏன் இந்த பாகுபாடு என தெரியவில்லை. ராமேசுவரத்தில் 3 இடங்களில் மீன்விற்பனைக்கூடம் அமைத்து தர வேண்டும். ராமேசுவரம் பதிவு எண் கொண்ட சில படகுகள் பல ஆண்டுகளாக மண்டபம் பகுதியில் மீன்பிடித்து வருவதால் அவர்களுக்கு அங்கு பதிவெண் மாற்றி வழங்கி தொழில் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

அனுமதி

ஜாகிர்உசேன்: மண்டபம் பகுதியில் ஒற்றுமையாக மீன்பிடி தொழில் செய்து வரும் நிலையில் ராமேசுவரம் பகுதியினர் வந்து மீன்பிடிக்க பதிவு எண் மாற்றித்தரக்கூடாது. ஒரு படகிற்கு கூட அவ்வாறு அனுமதி வழங்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். இதேகருத்தை மண்டபம் பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.

போஸ்: ராமேசுவரம் துறைமுகத்தில் 681 படகுகள் பதிவு செய்து சென்றுவருகின்றன. ஆனால், பதிவு செய்யாமல் அனுமதியின்றி 300-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு செல்கின்றன. வெளியூர்களில் இருந்து வரும் பதிவு எண் இல்லாமல் செல்லும் இதுபோன்ற படகுகள் கடத்தலில் ஈடுபடுகின்றன. இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. அந்த படகுகளை அப்புறப்படுத்த வேண்டும்.

ஒப்பந்தம்

இரட்டை மடி மீன்பிடிப்பதற்காகவும் கடத்தல் செய்வதற்காகவும் இதுபோன்ற நம்பர் இல்லாத படகுகள் அதிகளவில் வந்துள்ளன. இதுபோன்ற படகுகளால் மீன்கள் அழிந்து மீன்களுக்கு பதிலாக வலைகளில் மஞ்சள் மூடைகள் தான் சிக்குகின்றன.

ராயப்பன்: கன்னியாகுமரி முதல் நாகபட்டினம் வரையிலான கடல்பகுதியில் காற்றாலை அமைக்க தமிழக அரசு டென்மார்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் மீன்பிடிக்க முடியாத நிலை ஏற்படுவதோடு கடல்வளம் மட்டுமல்லாது மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். தமிழக பாரம்பரிய கடல்பகுதியை கார்ப்பரேட்டுக்கு கொடுக்கும் இந்த ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

நடவடிக்கை

கருணாமூர்த்தி: அனுமதி பெறாமல் செல்லும் படகுகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. 3 நாட்கள் அனுமதி பெற்றும் 3 நாட்கள் அனுமதி பெறாமலும் கடலுக்கு செல்லும் படகுகளை பறிமுதல் செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமேசுவரம் தீவு பகுதியில் புற்றீசல் போல இரால் பண்ணைகள் பெருகி விட்டன. இதனை தடுக்க வேண்டும். பல மாதங்களாக நடைபெறாமல் இருந்த மீனவர் குறைதீர் கூட்டத்தினை இனி முறையாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.

கலெக்டர்: அனுமதி பெறாமல் கடலுக்கு செல்லும் படகுகளை அவ்வப்போது ரோந்து சென்று நடவடிக்கை எடுத்து வருகிறோம். 37 படகுகளுக்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு டீசல் மானியம் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது. மீனவர் குறைதீர் கூட்டம் இனி மாதந்தோறும் நடத்தப்படும். அடுத்த கூட்டத்திற்கான தேதி தற்போதைய கூட்டத்திலேயே அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story