இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் நாட்டுப்படகு கடலில் மூழ்கியது
ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக 4 மீனவர்கள் உயிர்தப்பினர்.
ராமேசுவரம்,
ராமேசுவரத்தை சேர்ந்த நாட்டுப்படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகு பலத்த சேதம் அடைந்து கடலில் மூழ்கியது. ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக 4 மீனவர்கள் உயிர்தப்பினர்.
ரோந்து கப்பல்
ராமேசுவரம் அருகே உள்ள தங்கச்சிமடம் சூசையப்பர் பட்டினம் பகுதியில் மீன்பிடி துறைமுக பகுதியில் இருந்து அந்தோணியார் அடிமை என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகு ஒன்றில் கில்மன்(வயது 25), சபரி (43), சுவிங்டன்(21), அந்தோணி சிலுவை(60) ஆகிய 4 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
நேற்று முன்தினம் இரவு கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் அவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் இந்த நாட்டுப் படகு மீது வேகமாக மோதி உள்ளனர். ரோந்து கப்பல் மோதிய வேகத்தில் படகின் பின்பகுதி பலகைகள் உடைந்து சேதமானது.
4 பேர் மீட்பு
இதனால் படகில் கடல் நீர் உள்ளே புகுந்து படகு மூழ்கும் நிலை ஏற்பட்டது. செய்வதறியாமல் திகைத்த மீனவர்கள் உடனடியாக ராமேசுவரத்தில் உள்ள மற்ற மீனவர்களுக்கு தங்களை காப்பாற்றுமாறு தகவல் தெரிவித்தனர்.
இதைதொடர்ந்து ராமேசுவரம் துறைமுக பகுதியில் இருந்து நாட்டுப்படகு ஒன்றில் விரைந்து சென்ற மீனவர்கள் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மூழ்கும் நிலையில் இருந்த படகையும், அதில் இருந்து 4 மீனவர்களையும் உயிருடன் பாதுகாப்பாக மீட்டு ராமேசுவரம் துறைமுக கடற்கரைக்கு நேற்று அதிகாலையில் அழைத்து வந்தனர். இதனால் 4 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
அத்துமீறல்
இதுகுறித்து உயிர் தப்பி வந்த மீனவர் கில்டன் கூறியதாவது:- கச்சத்தீவு அருகே உள்ள இந்திய கடல் பகுதிக்குள் இரவு 12 மணிக்கு மீன் பிடித்துக் கொண்டிருந்தோம். அப்போது திடீரென ரோந்து கப்பல் ஒன்றில் வந்த இலங்கை கடற்படையினர் படகின் மீது வேகமாக மோதினார்கள்.
மோதிவிட்டு சிறிது தூரம் சென்ற பிறகு மீண்டும் 2-வது முறையாக வந்து மீண்டும் படகு மீது வேகமாக மோதினார்கள். இந்திய கடல் எல்லைக்குள் தான் மீன்பிடித்துக் கொண்டிருந்தோம். எல்லை தாண்டி மீன்பிடிக்க செல்லவில்லை. இந்திய எல்லைக்குள்ளேயே வந்து அத்துமீறி நுழைந்து இலங்கை கடற்படையினர் வேண்டும் என்றே தான் படகை மூழ்கடிக்கும் நோக்கில் நடந்துள்ளனர்.
கடலில் மூழ்கியது
ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின்பகுதி அதிக சேதம் அடைந்து படகு கடலில் மூழ்க தொடங்கியது இதையடுத்து ராமேசுவரத்தில் உள்ள எங்கள் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தோம். அவர்கள் விரைந்து வந்து எங்கள் 4 பேரையும் படகுடன் மீட்டு ராமேசுவரம் அழைத்து வந்தனர். ரோந்து கப்பல் மோதியதில் சேதமான நாட்டுப் படகை சீரமைக்க ரூ.1 லட்சத்திற்கும் மேல் செலவாகும். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த சில நாட்களாகவே மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையால் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.