பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி படகுகள் சேதம்


பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி படகுகள் சேதம்
x

மாண்டஸ் புயல் எதிரொலியாக பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்தன. மண்டபத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது.

ராமநாதபுரம்

பாம்பன்,

மாண்டஸ் புயல் எதிரொலியாக பாம்பனில் பலத்த காற்றில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதம் அடைந்தன. மண்டபத்தில் விசைப்படகு கடலில் மூழ்கியது.

படகுகள் மோதி சேதம்

வங்கக்கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயலால், ராமேசுவரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ய தொடங்கியது. இடைவிடாமல் காலை வரை தொடர்ந்து மழை பெய்த வண்ணமாக இருந்தது. பகலில் மழை இல்லை. வானம் மேகமூட்டமாக காணப்பட்டது.

அதே நேரத்தில் பாம்பன் பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த காற்று வீசியதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டது. பலத்த மழையும் பெய்தது.

பலத்த காற்றால் தெற்குவாடி துறைமுக கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நங்கூர கயிறுகள் அறுந்து ஒன்றோடு ஒன்று மோதி பலகைகள் உடைந்து சேதம் அடைந்தன. இதில் 2 விசைப்படகுகள் அதிக சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில படகுகள் கரை ஒதுங்கி கிடந்தன. சேதம் அடைந்த மற்றும் கரை ஒதுங்கிய விசைப்படகுகளை மீனவர்கள் மீண்டும் ஆழமான கடல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக நிறுத்தும் பணியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.

கடலில் மூழ்கியது

மண்டபம் தெற்கு துறைமுக கடல் பகுதியில் விசைப்படகு ஒன்று நங்கூரம் அறுந்து கரையோரத்தில் உள்ள கடல் பகுதியில் மூழ்கிய நிலையில் கிடந்தது. அந்த படகை மீனவர்கள் கரையில் ஏற்றி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று 3-வது நாளாக ராமேசுவரம், பாம்பன் உள்பட மாவட்டம் முழுவதும் விசைப்படகு, நாட்டுப்படகு மற்றும் பைபர் படகு என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.


Related Tags :
Next Story