ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி


ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி
x

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடைபெற்றது இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

படகு போட்டி

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலுக்கு மத்தியிலும் சுமார் 35 லட்சம் பேர் இங்கு சுற்றுலா வந்தனர். இந்த ஆண்டு கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால் இந்த சீசனில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளை கவர கோடை காலத்தில் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கோடை விழா நடத்தப்படும்.

இந்தாண்டுக்கான கோடை விழா கடந்த 7-ம் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில்காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. மேலும் சுற்றுலாப்பயணிகளை உற்சாகப்படுத்த சுற்றுலாத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டி நடந்தது. ரம்மியமான சூழ்நிலையில் நடந்த போட்டியில் பல்வேறு பிரிவுகளில் சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்டனர். இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு

இதன்படி நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவில் ஊட்டியை சேர்ந்த பிரான்சிஸ்- கார்த்திக் ஜோடி முதலிடம் பிடித்தது. அம்ரித்- கார்த்திக் ஜோடி 2-ம் இடத்தையும், அமர்நாத்- கார்முகில் ஜோடி 3-வது இடத்தையும் பிடித்தது.

இதேபோல் கலப்பு இரட்டையர் பிரிவில் (தம்பதியினர் பிரிவு) கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பானுபிரியா -உமேஷ் ஜோடி முதலிடம் பிடித்தது. பூனேயை சேர்ந்த ஸ்ரீகணேஷ்-ருக்குஜா தம்பதி 2-ம் இடமும், ராஜபாளையத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன்- சித்ராதேவி தம்பதி 3-வது இடமும் பிடித்தது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

மகளிர் இரட்டையர் பிரிவில் ஊட்டியை சேர்ந்த திரேசா -நந்தினி முதலிடமும், ஊட்டியை சேர்ந்த ப்ரீத்தி -கவுசல்யா 2-வது இடமும், சென்னையை சேர்ந்த ஸ்வப்னா- லட்சிதா ஆகியோர் 3-ம் இடமும் பிடித்தனர். துடுப்பு படகு பிரிவில் ஊட்டியை சேர்ந்த ராம்குமார் முதலிடமும், ஊட்டியை சேர்ந்த ஜார்ஜ் 2-ம் இடமும், ஊட்டியை சேர்ந்த கமலக்கண்ணன் 3-ம் இடமும் பிடித்தனர்.

இதைத் தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுலா வளர்ச்சி கழக மண்டல மேலாளர் வெங்கடேசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் உமா சங்கர், ஊட்டி படகு இல்ல மேலாளர் சாம்சன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். கொரோனா காரணமாக வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த பொதுமக்களுக்கு படகு போட்டி குதூகலம் அளிப்பதாக இருந்தது.


Next Story