போடியில் இருந்து சென்னைக்குதினமும் ரெயில் இயக்க வேண்டும்:அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
போடியில் இருந்து சென்னைக்கு தினமும் ரெயில் இயக்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் தேனி மாவட்ட பிரதிநிதிகள் பேரவை கூட்டம் தேனியை அடுத்த திருமலைநகரில் உள்ள சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் பேயத்தேவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ஞானதம்பி தொடங்கி வைத்து பேசினார். மாநில பொதுச்செயலாளர் செல்வம், மாவட்ட துணைத்தலைவர் ராமகிருட்டிணன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
இக்கூட்டத்தில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் அரசுத்துறைகளை ஒன்றிணைத்து ஊழியர்களை குறைக்கும் போக்கினை கைவிட வேண்டும். கிடப்பில் போடப்பட்ட திண்டுக்கல்-லோயர்கேம்ப் அகல ரெயில்பாதை திட்டத்தை உடனடியாக மத்திய அரசு அமல்படுத்த மாநில அரசு நிர்பந்திக்க வேண்டும். போடி முதல் சென்னை வரை வாரம் 3 நாட்கள் இயக்கப்படும் ரெயில் சேவையை தினமும் இயக்க வேண்டும். வைகை அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தூர்வார வேண்டும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மதுரை-கம்பம் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.