ஊராட்சி செயலாளரை மாற்றக்கூடாது
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் உடுமலை ஊராட்சி ஒன்றியம் போடிப்பட்டி ஊராட்சி துணை தலைவர் மற்றும் 7 வார்டு உறுப்பினர்கள் மனு கொடுத்தனர். அந்த மனுவில், 'உடுமலை நகராட்சியையொட்டி, போடிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. மக்கள் தொகை 13 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஊராட்சி இதுவாகும். கொரோனா காலத்தில் கூட தடுப்பு நடவடிக்கையில் ஊராட்சி நிர்வாகம் மற்றும் தலைவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்தநிலையில் குறிப்பிட்ட 3 வார்டு உறுப்பினர்கள் மட்டும் அரசியல் காழ்ப்புணர்வு காரணமாக தலைவர் மீதும், ஊராட்சி செயலாளர் மீதும் புகார் கூறி வருகிறார்கள். செயலாளரை பணியிடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வருகிறது. ஊராட்சி செயலாளரை மாற்றும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறியுள்ளனர்.