பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
நெல்லை அருகே கொலை செய்யப்பட்ட பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நெல்லை அருகே பாளையங்கோட்டை கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் ராஜாமணி (வயது 31). இவர் கீழநத்தம் பஞ்சாயத்து 2-வது வார்டு உறுப்பினராக இருந்தார். கடந்த 13-ந்தேதி அந்த பகுதியில் அவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கீழநத்தம் மேலூரை சேர்ந்த மாயாண்டி, தெற்கூரை சேர்ந்த இசக்கி உள்பட 3 பேர் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இதுதொடர்பாக பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.
இந்தநிலையில் ராஜாமணி உடல் பிரேத பரிசோதனை முடிந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அவரது உடலை உறவினர்கள் வாங்க மறுத்து கீழநத்தம் வடக்கூர் கிராமத்தில் நேற்று 3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள். ராஜாமணியின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். அவரது மனைவி பட்டதாரி என்பதால் அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இந்த கொலையை செய்ய தூண்டியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று மாலையில் ராஜாமணி உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.