வண்டலூர் பெரிய ஏரியில் பிணமாக மிதந்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது
வண்டலூர் பெரிய ஏரியில் பிணமாக மிதந்த பெண்ணின் உடல் அடையாளம் தெரிந்தது.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பெரிய ஏரியில் நேற்று முன்தினம் 25 மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் உடல் மிதந்து கொண்டிருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஓட்டேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று ஏரியில் பிணமாக மிதந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து ஒட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து போன பெண் யார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இறந்து போன பெண் சென்னை ஓட்டேரி, கொசப்பேட்டையை சேர்ந்த சூரியபிரகாஷ் என்பவரின் மனைவி சுருதி (வயது 23), என்பது அடையாளம் தெரிந்தது. இவருக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சினை காரணமாக ஒரகடம் அருகே மேட்டுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலை வந்த சுருதி வண்டலூர் பெரிய ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வருவாய் ஆர்.டி.ஓ.வும் விசாரித்து வருகிறார்.