மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் - விமானம் மூலம் சென்னைக்கு அனுப்பி வைப்பு
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இருதயம், நுரையீரல், கல்லீரல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. இருதயம், நுரையீரல், கல்லீரல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
திண்டுக்கல் வாலிபர்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் செங்குளம் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 32). கடந்த 12-ந்தேதி, நத்தம் பாப்பாபட்டி விலக்கு பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த பஸ், கார்த்தி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அதன்பின்னர் அவர், அன்றைய தினம் இரவு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு அடைந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத்தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் கார்த்தியின் இருதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை அகற்றப்பட்டன.
விமானத்தில் அனுப்பி வைப்பு
இதனை தொடர்ந்து இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை நேற்று காலை சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, போலீசாரின் ஒத்துழைப்புடன் அவரது இருதயம், நுரையீரல், கல்லீரல் ஆகியவை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது, அங்கிருந்து சென்னை அனுப்பி வைக்கப்பட்டது. இதுபோல், சிறுநீரகம், கண்கள் ஆகியவை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கும் தானமாக கொடுக்கப்பட்டது.