'பாடி ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு' - ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் அரசு பஸ்கள்-சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை
ஆபத்தை ஏற்படுத்த காத்திருக்கும் அரசு பஸ்களை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
'பாடி ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு' இந்த வசனம் மதுரையில் ஓடும் அரசு பஸ்களுக்கு பொருந்தும். அந்தஅளவுக்கு மதுரையில் அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள பெரும்பான்மையான பஸ்கள் போதிய பராமரிப்பின்றி இருக்கிறது. குறிப்பாக, பஸ்களின் தகரங்கள் பெயர்ந்து விபத்து ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. பஸ்களின் படிக்கட்டுகள் எப்போது வேண்டுமானாலும் கீழே கழன்று விழும் நிலையில் இருக்கிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் படியில் பயணம் செய்து, கீழே விழும் அபாயமும் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது. இதுமட்டுமின்றி, அரசு பஸ்கள் முறையாக பராமரிக்கப்படாததால் அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நின்று விடுகிறது. அதனால் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. மதுரையில் இருந்து மேலூர் செல்லும் அரசு டவுன் பஸ் பார்க்க நன்றாக இருந்தாலும் படிக்கட்டு சேதமானநிலையில் சென்றுவருகிறது.
தமிழக அரசு, டவுன் பஸ்களில் மகளிர் பயணம் செய்ய இலவசம் என அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான பெண்கள் டவுன் பஸ்சில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கண்ணாடி, பிரேக், ஹாரன், விளக்கு உள்ளிட்ட போதிய பராமரிப்பு இல்லாததால் பஸ் டிரைவர்கள் மற்றும் நடத்துனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், விபத்து ஏற்படும்முன் சேதமடைந்த நிலையில் உள்ள அரசு பஸ்களை மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.