புழல் சிறை காவலர்களுக்கு சட்டையில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமரா அறிமுகம்
சிறைகளில் கைதிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்க சிறைக் காவலர்களுக்கு சீருடையில் பொருத்தும் நவீன கேமரா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த புழல் விசாரணை சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகளும், தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகளும், பெண்கள் சிறையில் 200-க்கும் மேற்பட்ட கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறை காவலர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும், அவர்களின் பணி விவரங்களை கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்கவும் காவலர்களின் சட்டையில் பொருத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள் அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளுக்கும் முதல் கட்டமாக 50 கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளது.
அதன்படி புழல் சிறையில் நேற்று தண்டனை சிறையில் 5 கேமராக்களும், விசாரணை சிறையில் 5 கேமராக்களும் என சிறை காவலர்களுக்கு சட்டையில் பொருத்தி கண்காணிக்கும் வகையில் 10 கேமராக்கள் வழங்கப்பட்டது. சிறை காவலர்கள் இதனை தங்கள் சட்டையில் பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். இதன் மூலம் சிறை காவலர்களின் நடவடிக்கைகள் மட்டுமின்றி கைதிகளின் நடவடிக்கைகளையும் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே கண்காணிக்கலாம் என போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை தலைவர்கள் முருகேசன், துரைசாமி, சூப்பிரண்டுகள் கிருஷ்ணராஜ், நிகிலா ஆகியோர் கலந்து கொண்டனர்.