சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - மர்ம நபர் யார்? போலீஸ் விசாரணை


சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - மர்ம நபர் யார்? போலீஸ் விசாரணை
x
சென்னை

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மதியம் 1 மணி அளவில், மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, எம்.ஜி.ஆர் சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு வெடி குண்டு வைத்திருப்பதாக கூறி தொடர்பை துண்டித்து விட்டார்.

இதையடுத்து ரெயில் நிலைய போலீசாருக்கு உடனடியாக எச்சரிக்கை தகவல் கொடுக்கப்பட்டது. அதையொட்டி ரெயில் நிலைய வளாகத்துக்குள் போலீசார் மோப்பநாய்களுடன் விரைந்தனர். ரெயில் நிலையம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதற்கிடையே கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம நபரை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டது. அதில் அந்த நபர் தாம்பரத்தில் இருந்து பேசியது தெரியவந்தது.

இந்தநிலையில் ரெயில் நிலையத்தில் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், இன்ஸ்பெக்டர்கள் சசிகலா, வடிவுகரசி, ரெயில்வே பாதுகாப்பு படை ஏ.எஸ்.சி. ராஜு, இன்ஸ்பெக்டர்கள் ரோகித்குமார், பத்மாகர் ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ரெயில் நிலைய வளாகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டனர்.

ரெயில் பயணிகளின் உடைமைகளை 2 மோப்பநாய்களை கொண்டு போலீசார் தீவிர சோதனையிட்டனர். சுமார் 5 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல், வதந்தி என்பது தெரியவந்தது. வெடி குண்டு மிரட்டல் விட்ட நபரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

திடீரென விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மற்றும் அதை தொடர்ந்து நடைபெற்ற சோதனையால் ரெயில் நிலையம் முழுவதும் பரபரப்பாக காட்சியளித்தது.


Next Story