பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்


பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள கீழக்கரை மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முன்பதிவு செய்ய அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 Jan 2024 11:44 AM GMT (Updated: 18 Jan 2024 12:28 PM GMT)

கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

மதுரை,

ஜல்லிக்கட்டுக்கு உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் அருகே பிரமாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம்் அமைக்கப்படும் என சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதான பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடந்தன.

கடந்த வாரம் பணிகள் நிறைவு பெற்று பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு அரங்கம் திறப்பு விழாவுக்கு தயார் ஆனது. இம்மாத கடைசியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி்ன் நேரில் வந்து ஜல்லிக்கட்டு மைதானத்தை திறந்து வைப்பார் என அமைச்சர்கள் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், மதுரை கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் 24-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். அன்றைய தினம் அங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பிற்பகல் 12 மணி வரை முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://madurai.nic.in இணையதளம் மூலம் தங்களது பெயர்கள், காளைகள் குறித்த விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


Next Story