தர்மபுரியில் புத்தக திருவிழா


தர்மபுரியில் புத்தக திருவிழா
x

தர்மபுரியில் புத்தக திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதுகுறித்து தகடூர் புத்தக பேரவை செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான டாக்டர் செந்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மபுரி

புத்தக திருவிழா

தர்மபுரியில் 4-வது புத்தக திருவிழா தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை ஆகியவற்றின் சார்பில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி ஜூலை மாதம் 4-ந்தேதி வரை நடக்கிறது. இந்த புத்தக திருவிழாவை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைக்கிறார்.

விழாவில் தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். இந்த புத்தக கண்காட்சியில் 100 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. பல்வேறு பதிப்பகங்களின் சார்பில் 50 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன.

எழுத்தாளர்கள்

இந்த ஆண்டின் புத்தக திருவிழா கைபேசியை விடு, புத்தகத்தை எடு என்கிற கருப்பொருளை மையமாக வைத்து நடத்தப்படுகிறது. புத்தக திருவிழா நடைபெறும் 11 நாட்களிலும் முற்பகலில் புத்தக வெளியீடு புத்தக அறிமுகம், பிற்பகலில் கவியரங்கம், கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. தினமும் மாலை 6 மணிக்கு பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த சிறப்பு பேச்சாளர்கள் பேசுகிறார்கள்.

இதன்படி நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலை டாக்டர் சிவராமன், 26-ந்தேதி எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார், 27-ந்தேதி எழுத்தாளர் தமிழ்ச்செல்வன், 28- ந்தேதி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலகிருஷ்ணன், 29-ந்தேதி திரைப்பட பாடலாசிரியர் யுகபாரதி, 30-ந்தேதி பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் ஆகியோர் பேசுகிறார்கள்.

பயன்பெறலாம்

இதேபோல் ஜூலை மாதம் 1-ந்தேதி பேச்சாளர் சோம.வள்ளியப்பன், சூழலியலாளர் நக்கீரன், 3-ந் தேதி எழுத்தாளர் கண்மணி குணசேகரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், 4-ந்தேதி எழுத்தாளர் அழகிய பெரியவன் ஆகியோர் பேசுகிறார்கள். இந்த புத்தக திருவிழாவில் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன், பொருளாளர் கார்த்திகேயன், ஒருங்கிணைப்பாளர் தங்கமணி, பொறுப்பாளர்கள் ராஜசேகரன், அறிவுடைநம்பி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


Next Story