நாமக்கல்லில் புத்தக திருவிழா


நாமக்கல்லில் புத்தக திருவிழா
x

நாமக்கல்லில் புத்தக திருவிழாவை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

நாமக்கல்

புத்தக திருவிழா

நாமக்கல் நல்லிபாளையம் வடக்கு அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழக அரசின் சார்பில் புத்தக திருவிழா 11 நாட்கள் நடைபெற உள்ளது. இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. ஏ.கே.பி. சின்ராஜ் எம்.பி, ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவுக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமை தாங்கி, புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக மாபெரும் புத்தக திருவிழாவானது 11 நாட்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்த வரை பழம் பெரும் இலக்கியங்கள், வரலாற்று நூல்களை வழங்கிய சிறப்பான பண்பாட்டை கொண்ட மாநிலமாக திகழ்கிறது. மனித வாழ்வுக்கு தேவையான வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து தந்த சங்க இலக்கியங்களின் பெருமை கொண்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும்.

புத்தக வாசிப்பு

அனைவரும் சங்க புத்தகம் வாசிப்பதன் மூலம் மட்டுமே வாழ்க்கை நெறிமுறைகளை அறிந்து கொள்ள முடியும். எனவே பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை புத்தகங்கள் வாசிப்பதை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளை வருங்காலத்தில் நல்ல பண்புகள் கொண்டவர்களாக உருவாக்கும் பொறுப்பு நம்மிடம் உள்ளது. அதற்கு புத்தக வாசிப்பு இன்றியமையாததாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, நாமக்கல் நகர்மன்ற தலைவர் கலாநிதி, நாமக்கல் நகர்மன்ற உறுப்பினர் சிவக்குமார், உதவி கலெக்டர் மஞ்சுளா கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story