அரியலூரில் புத்தக திருவிழா


அரியலூரில் புத்தக திருவிழா
x

அரியலூரில் புத்தக திருவிழா நடைபெற்றது. இதனை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர்

அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டு பேரமைப்பு, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 7-வது புத்தக திருவிழா அரியலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னப்பா (அரியலூர்), க.சொ.க.கண்ணன் (ஜெயங்கொண்டம்) ஆகியோர் முன்னிலை வகித்தனர்

புத்தக திருவிழாவை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்ததுடன், புத்தக விற்பனையையும் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் புத்தகத் திருவிழா நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு அதற்கென நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டு அரியலூரில் 7-வது புத்தக திருவிழா தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புத்தகத் திருவிழா மே மாதம் 3-ந் தேதி வரை மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது.

அரியலூர் புத்தக திருவிழா நடைபெறும் ஒவ்வொரு நாட்களும் தமிழகத்தின் தலைச்சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்கள். இதேபோன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள மண்ணின் மைந்தர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையிலும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பேச்சாளர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு உரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், அரியலூர் புத்தக திருவிழாவினை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்ட மாவட்ட நிர்வாகத்திற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கிராமங்கள் தோறும் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன. தற்பொழுது பராமரிப்பின்றி இருக்கும் நூலகங்களை சீரமைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. புதிய புத்தகங்களைப் படிப்பதால் அறிவை பெருக்கி கொள்ள முடியும். நூல்கள் ஒரு மனிதனின் அறிவைப் பெருக்கும் மூலதனமாகும். எனவே, அனைவரும் தவறாது புத்தக வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். மேலும், புத்தகத் திருவிழாவினை வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா, நகர்மன்றத் தலைவர் சாந்தி கலைவாணன், தமிழ்ப் பண்பாட்டுப் பேரவை தலைவர் பாலகிருஷ்ணன், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

புத்தக திருவிழாவில் ஒவ்வொரு நாட்களும் மாலை 6 மணிக்கு தமிழகத்தின் தலை சிறந்த பேச்சாளர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர். அதன்படி இன்று (திங்கட்கிழமை) கவிஞர் மல்லூரி, நாளை (செவ்வாய்க்கிழமை) திண்டுக்கல் லியோனி, 26-ந் தேதி கவிஞர்கள் நந்தலாலா, சல்மா, 27-ந் தேதி ஞானசம்பந்தம், 28-ந் தேதி பழனியப்பன், 29-ந் தேதி ராமலிங்கம், 30-ந் தேதி ராமச்சந்திரன், மே 1-ந் தேதி மோகனசுந்தரம், 2-ந் தேதி கவிதா ஜவகர், 3-ந் தேதி ஈரோடு மகேஷ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசுகின்றனர்.


Next Story