தர்மபுரியில் புத்தக திருவிழா


தர்மபுரியில் புத்தக திருவிழா
x

தர்மபுரியில் புத்தக கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி

தர்மபுரியில் புத்தக கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

புத்தகத் திருவிழா

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், தகடூர் புத்தக பேரவை பாரதி புத்தகாலயம் ஆகியவற்றின் சார்பில் 4-ம் ஆண்டு புத்தகத் திருவிழா தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சிக்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, எஸ்.பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தகடூர் புத்தக பேரவை செயலாளர் செந்தில் வரவேற்றார்.

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்து புத்தக அரங்குகளை பார்வையிட்டார். இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த அரங்கை திறந்து வைத்தார். விழாவில் அவர் பேசியதாவது:-

புத்தகங்கள் என்பவை வெறும் எழுத்துக்கள் அல்ல. அவை பலருடைய அனுபவங்களின் வெளிப்பாடு. நான் சிறுவயதில் பாட புத்தகங்களை விட துப்பறியும் நாவல்களை விரும்பி படிப்பேன். அந்தப் படிப்பு இப்போது அரசியலில் பலரை துப்பறிய பயன்படுகிறது. மாணவர்களின் மனம் டீன்- ஏஜ் பருவத்தில் அலைபாய்கிறது. அப்போது அவர்கள் தவறான பாதைக்கு செல்லாமல் நல்வழிப்படுத்த புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.

13 ஆயிரம் நூலகங்கள்

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கிராமப்புறங்களில் மாணவர்கள், பொது மக்களிடையே படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் கிராம ஊராட்சிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி நூலகங்கள் அமைக்கப்பட்டன. இதேபோல் விளையாட்டு கருவிகள் உடற்பயிற்சி கருவிகள் வழங்கப்பட்டன. கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகள் இந்த கிராமப்புற நூலகங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் கிராமப்புற மாணவர்களின் மாணவர்கள், இளைஞர்களின் வாசிப்புத் திறன் பாதிக்கப்பட்டது.

தமிழக முதல்- அமைச்சர் மாவட்டம்தோறும் புத்தக கண்காட்சி நடத்த ரூ.25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே தன்னை சந்திக்க வருபவர்கள் புத்தகங்களை மட்டுமே அன்பளிப்பாக வழங்க வேண்டும் என்று அறிவித்தார். இதன் மூலம் சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் கல்லூரிகளுக்கும், நூலகங்களுக்கு வழங்கப்பட்டு மாணவ- மாணவிகளின் அறிவுத் திறனை மேம்படுத்த உதவுகின்றன. இந்த புத்தக கண்காட்சியை பொதுமக்கள் மாணவ-மாணவிகள் திரண்டு வந்து பார்வையிட வேண்டும். அதிக புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார்.

பாராட்டு

விழாவில் தகடூர் புத்தக பேரவைக்கு தனது சேமிப்பு நிதி ரூ.2 ஆயிரத்தை வழங்கிய மாணவி சவுபர்ணிகாவுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை அமைச்சர் வழங்கினார்.

விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தடங்கம் சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், முன்னாள் எம்.பி.க்கள் எம்.ஜி.சேகர், தாமரைசெல்வன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், நகராட்சித் தலைவர் லட்சுமிநாட்டான் மாது, ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மாது சண்முகம், ஓய்வு பெற்ற வன அலுவலர் வனபிரியன் உள்பட துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். தகடூர் புத்தக பேரவை தலைவர் சிசுபாலன் நன்றி கூறினார்.


Next Story