கடலூரில் ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவன் கைது


கடலூரில் ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவன் கைது
x
தினத்தந்தி 26 Oct 2023 7:00 PM GMT (Updated: 26 Oct 2023 7:01 PM GMT)

கடலூரில், ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் ரூ.10-க்கு பாலை விற்பனை செய்தது அம்பலமானது.

கடலூர்

கடலூர் வண்ணாரப்பாளையம் சில்வர் பீச் மெயின்ரோட்டில் உள்ள ஆவின் பால் கடைக்கு, கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆட்டோவில் வாலிபர் ஒருவர் அதிகாலை 2 மணி அளவில் வந்தார். அவர் பூட்டி இருந்த அந்த கடைக்கு வெளியில் வைத்திருந்த பால் பாக்கெட்டுகளை பெட்டியோடு எவ்வித பதற்றமும் இன்றி திருடிச்சென்று விட்டார்.

அவர் பால் பாக்கெட்டுகளை திருடிச்செல்லும் காட்சிகள், அந்த கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் பரவி வைரலானது. இது பற்றி கடை உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

சிறுவன் கைது

விசாரணையில், ஆட்டோவில் வந்து பால் பாக்கெட்டுகளை திருடிச்சென்றது கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 16 வயது மகன் என்பது தெரியவந்தது. இந்த சிறுவன், தன்னுடைய தந்தை உடல்நிலை சரியில்லாமல், ஆட்டோவை வீட்டில் நிறுத்தி இருந்த போது, இரவு நேரத்தில் சவாரி செல்வதாக கூறி வெளியே ஆட்டோவில் சுற்றி வந்து, தலா ரூ.23, ரூ.27, ரூ.30 -க்கு விற்க வேண்டிய பால் பாக்கெட்டுகளை திருடி, அதை தனக்கு தெரிந்த கடைகளில் 10 ரூபாய்க்கு விற்பனை செய்து, அந்த பணத்தை ஜாலியாக செலவு செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த சிறுவனை போலீசார் கைது செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.


Next Story