கார் மோதி சிறுவன் சாவு: உதவி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை


கார் மோதி சிறுவன் சாவு: உதவி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகை
x

பத்தமடையில் கார் மோதி சிறுவன் இறந்த வழக்கில் டிரைவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடையில் கார் மோதி சிறுவன் இறந்த வழக்கில் டிரைவரை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

சிறுவன் சாவு

நெல்லை மாவட்டம் பத்தமடை சிவானந்தா காலனி காந்திநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 33) கூலித்தொழிலாளி. இவரது மனைவி அமராவதி (26). இவர்களுடைய மகன் சபரி (7). இவன் நேற்று முன்தினம் பத்தமடை - களக்காடு சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அந்த வழியாக வந்த கார், கண்ணிமைக்கும் நேரத்தில் சபரி மீது மோதி சென்றது.

இதனைக் கண்ட குடும்பத்தினர் சிறுவனை மீட்டு சேரன்மாதேவி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முற்றுகை

இந்த நிலையில் நேற்று காலை சபரியின் உறவினர்கள், சம்பந்தப்பட்ட கார் டிரைவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி சேரன்மாதேவி உதவி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சேரன்மாதேவி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டிச் சென்றது மேலச்செவல் நைனா முகமது பள்ளிவாசல் தெருவை சேர்ந்த நாகூர் மீரான் மகன் சேக் முகம்மது ராஜா (33) என்பது தெரிய வந்தது.


Next Story