காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை


காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை
x

காதலி பேசாததால் காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குமரி,

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா ராயகிரி அருகே மேல கரிசல்குளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். விவசாயியான இவருடைய மகன் மிதுன்குமார் (வயது 19). இவர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் கம்ப்யூட்டர் அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக மிதுன்குமார் கல்லூரி விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார்.

சனிக்கிழமையான நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால் மிதுன்குமாருடன் விடுதி அறையில் தங்கியிருந்த மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் அவருடைய அறையில் அவர் மட்டும் தனியாக இருந்தார்.

மிதுன்குமாரும், ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வரும் மாணவியும் கடந்த 1½ வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் மிதுன்குமார் உடன் படிக்கும் சில மாணவர்களுக்கும் தெரியுமாம். ஒரு கட்டத்தில் காதலர்களுக்கிடையே சிறு, சிறு பிரச்சினை ஏற்பட்டு பிரியும் நிலைக்கு சென்றது.

கடந்த ஒருவாரமாக மாணவி கோபமடைந்து காதலனுடன் பேசவில்லையாம். மிதுன்குமார் பலதடவை செல்போனில் தொடர்பு கொண்டும் காதலி பேசாததால் மிகுந்த வேதனையான நிலைக்கு தள்ளப்பட்டார். சக மாணவர்களுடன் சிரித்து பேசினாலும் உள்ளுக்குள் வேதனையை மறைத்து கொண்டார். இந்த சூழலில் அவருடன் தங்கிய சக மாணவர்கள் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றதால் மிதுன்குமார் மட்டும் தனிமையில் இருந்ததால், காதலியின் நினைப்பு அவருக்கு மீண்டும் வந்துள்ளது.

பின்னர் அவர் இரவு 11 மணிக்கு மேல் திடீரென விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த சமயத்தில் மாணவி, காதலன் மிதுன்குமாரின் செல்போனுக்கு திடீரென தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் அவர் எடுக்கவில்லை. உடனே அவர் மிதுன்குமார் தங்கிய விடுதியில் வேறொரு அறையில் இருந்த மாணவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அந்த மாணவர் மிதுன்குமார் தங்கியிருந்த அறைக்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தார்.

அங்கு மிதுன்குமார் தூக்கில் தொங்கி கொண்டிருந்தார். உடனே அவர் சத்தம் போட மற்ற மாணவர்களும், கல்லூரி நிர்வாகத்தினரும் ஓடி வந்து அவரை தூக்கில் இருந்து இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர், மிதுன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் விரைந்து வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மிதுன்குமாரின் செல்போனை போலீசார் கைப்பற்றி அந்த செல்போனில் அவருடன் கடைசியாக பேசியவர்கள் யார்? என்ற விவரத்தை சேகரித்து வருகின்றனர்.

காதலி பேசாததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story
  • chat