யு-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த சிறுவர்கள்


யு-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்த சிறுவர்கள்
x

வள்ளியூரில் யு-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வெடிக்க வைத்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

வள்ளியூர் (தெற்கு):

சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஒரு வீடியோ பரவியது. அதில் 3 பேர் ஒரு பழைய கட்டிட சுவர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி ஒத்திகை பார்ப்பது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதன் பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க 3 பேரும் நடனம் ஆடிய காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. அவர்கள் யார்? என்பது குறித்து பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்கள், நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே, வள்ளியூர் போலீசார் விரைந்து சென்று சம்பந்தப்பட்ட 3 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள், வள்ளியூர் கீழத்தெருவை சேர்ந்த இசக்கியப்பன் (வயது 25) மற்றும் 17, 19 வயதுடைய சிறுவர்கள் என்பது தெரியவந்தது. மேலும் 16 வயதுடைய சிறுவனுக்கு இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அவன் தப்பிச்சென்றுவிட்டதால் போலீசார் தேடி வருகிறார்கள்.

பிடிபட்ட 3 பேரும் யு-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டுகளை தயாரித்து உள்ளனர். அவர்கள் தயாரித்த குண்டுகளை ஒரு கட்டிடத்தின் சுவர் மீது வீசி ஒத்திகை பார்த்துள்ளனர். அதை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்து வெளியிட்ட போது, சிக்கிக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து இசக்கியப்பன் மற்றும் 2 சிறுவர்களை கைது செய்தார். 2 சிறுவர்களும் நெல்லையில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.

கைதானவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், அதில் வேறு ஏதேனும் வீடியோக்கள் உள்ளதா?, எதற்காக பெட்ரோல் குண்டு தயாரித்தனர்? என்பது குறித்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். யு-டியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்து வெடிக்க வைத்த சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story