பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்றம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா 13 நாட்கள் நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு பெரிய பெருமாள் சன்னதியில் உள்ள கொடிமரம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக கொடி பட்டம் மேளதாளங்கள் முழங்க ரதவீதி, மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
செப்பு தேரோட்டம்
பின்னர் கொடி மரத்தின் அருகே கொடி பட்டத்திற்கும், கொடி மரத்திற்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஆண்டாள் கோவில் அர்ச்சகர் ரகுபட்டர் கொடியை ஏற்றினார். கொடியேற்றத்தின் போது சிறப்பு அலங்காரத்தில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவினை முன்னிட்டு தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக செப்பு தேரோட்டம் வருகிற 25-ந் தேதியும், 27-ந் தேதி தீர்த்தவாரியும், 30-ந் தேதி புஷ்ப யாக நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.