உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பட்டிவீரன்பட்டி அருகே பதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில், உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
பட்டிவீரன்பட்டி அருகே திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் ஒட்டுப்பட்டி பிரிவில் பழைமையான பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வளாகத்தில் திறந்த வெளியில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள், கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடி சென்று விட்டனர்.
இதனையடுத்து நேற்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த பக்தர்கள், உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே கோவில் வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர்கள் 2 பேர் உண்டியலை உடைத்து பணத்தை திருடி செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதனை துருப்புச்சீட்டாக பயன்படுத்தி மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.